திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-01 18:45 GMT

திருச்செந்தூர்:

ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடா்ந்து காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு ராக்கால அபிஷேகம், ராக்கால தீபாராதனையும் நடைபெற்றது.

பக்தர்கள் குவிந்தனர்

முன்னதாக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி ரூ.100 கட்டணம் மற்றும் இலவச பொது தரிசன வரிசையில் சுமார் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதேபோல் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் சுவாமியை வழிபட்டனர்.

போலீசார் பாதுகாப்பு

பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவு வந்ததால் நகர் பகுதி, தெப்பக்குளம், பஸ்நிலையம் போன்ற இடங்களில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதேபோல் வாகனங்கள் நிறுத்துவதற்கு டி.பி. ரோட்டில் ஆங்காங்கே தற்காலிக கார் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகத்தில் நடந்து சென்ற பக்தர்கள் நெருக்கடியில் சிக்காமல் கோவிலுக்கு வந்து சென்றனர்.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்