ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அப்போது விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.;
ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அப்போது விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஆடிப்பெருக்கு
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு நாட்களிலும் பக்தர்கள் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதன்படி, இன்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற சாமாண்டியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிசி மாவு உள்ளிட்ட 11 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், விபூதி, குங்குமம், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோவில், கவுமாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், வேலப்பர் கோவில், வேணுகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கண்ணகி கோவில்
கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையான பளியன்குடியிருப்பு பகுதியில் பிரசித்திபெற்ற மங்கலநாயகி கண்ணகி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பரிவார தெய்வங்களான பெரியகருப்பன், சப்பானி முனீஸ்வரர், கழுவடி கருப்பன், அதர்வன பேச்சியம்மாள், ஆகாச ராக்காச்சியம்மாளுக்கு சக்தி கிடா வெட்டி வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி கந்தவேல் நவரிஷி செய்திருந்தார்.
இதேபோல் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மனுக்கு சவுந்தர்ய குல காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வீரபாண்டி கவுமாரியம்மன்
வீரபாண்டியில் உள்ள பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 16 வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலை முதலே கவுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக பெண்கள் கோவிலை ஒட்டியுள்ள முல்லைப்பெரியாற்றில் குளித்துவிட்டு, புதிய மாங்கல்ய கயிறுகளை மாற்றினர். பின்னர் விளக்ேகற்றி வழிபாடு செய்தனர்.
இதேபோல் பத்ரகாளிபுரம் பத்ரகாளியம்மன் கோவில், உப்புக்கோட்டை அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவிலிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.