சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் குவிந்த பக்தர்கள்

சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-07-28 21:33 GMT

சமயபுரம்:

நேர்த்திக்கடன் செலுத்தினர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று, ஆடி அமாவாசை என்பதால் நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்பும், விளக்கேற்றும் இடத்திலும் விளக்கேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

பின்னர் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதையொட்டி கோவில் இணை ஆணையர் கல்யாணி அறிவுறுத்தலின்படி பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியை உள்துறை கண்காணிப்பாளர் அழகர்சாமி மேற்பார்வையில், மணியக்காரர் பழனிவேல், கோவில் பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன காவலர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

சிறப்பு அலங்காரம்

மேலும் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் லால்குடி போலீஸ் துைண சூப்பிரண்டு சீதாராமன் அறிவுரையின்படி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில், ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில், மாகாளிகுடியில் உள்ள உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். சமயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

தா.பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம்

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு தா.பேட்டை பகுதியில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பிள்ளாதுரை பெரியமாரியம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள அன்னகாமாட்சியம்மன், புளியஞ்சோலை மாசி பெரியண்ணசாமி கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் நீராடிய பின், சூரியனை வழிபட்டு, கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். குல தெய்வ வழிபாட்டுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், மாசி பெரியண்ணசாமி கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவர் மதுரை காளியம்மனுக்கு 108 புடவை அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற ஆடி 3-வது வெள்ளிக்கிழமையன்று வளையல் அலங்காரம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்