சோலைமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள்
சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்;
அழகர்கோவில்
அழகர்கோவில் மலை உச்சியில் முருகப்பெருமானின் 6-வது படைவீடு என்னும் பிரசித்தி பெற்ற சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாட்டு சபையின் சார்பாக முருக பக்தர்கள் கடந்த 21-ந் தேதி அன்று பாதயாத்திரையாக புறப்பட்டு வந்தனர். நேற்று காலையில் அழகர்மலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் ஆடி பாடி, மேள தாளம் இசையுடன் நடந்தே சென்று சோலைமலை முருகன் கோவிலை அடைந்தனர். கோவிலின் வெளி பிரகாரங்களில் 108 முருக பக்தர்கள் மயில் காவடியுடன் ஆடி வந்தனர்.
தொடர்ந்து அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தேன், புஷ்பம், தீர்த்தம் உள்ளிட்ட 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும், மஹா தீபாராதனை, சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்களோடு நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். .முன்னதாக இலுப்பூர் முருக பக்த சபையினரை கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.