ராமேசுவரத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.
ஆடிப்பெருக்கு விழா
ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆற்றங்கரையோரம் மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுமங்கலி பூஜையும் செய்து வழிபாடு செய்தனர். அகில இந்திய புண்ணியத்தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இவ்வாறு புனித நீராடிய ஏராளமான பெண் பக்தர்கள் கடற்கரையில் பெரிய இலைகளை விரித்து அதில் பலவிதமான பழங்களை படையலிட்டும், புது துணிகள், திருமாங்கல்ய கயிறுகள் உள்ளிட்டவைகளை வைத்தும், நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டியும் பூஜை செய்தும் வழிபாடு நடத்தினார்கள்.
சாமி தரிசனம்
பூஜைக்கு பின்னர் புதிய திருமாங்கல்ய கயிற்றை பெண்கள் தங்கள் கழுத்திலும் அணிவித்து கொண்டனர். இவ்வாறு கடற்கரையில் பூஜை செய்த பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர். கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து படையலிட்டு பூஜை செய்தனர்.