பாபநாசம் சோதனைச்சாவடி பகுதியில் பக்தர்கள் திடீர் சாலை மறியல்
பாபநாசம் சோதனைச்சாவடி பகுதியில் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் சோதனைச்சாவடி பகுதியில் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக நேற்று அதிகாலை முதலே பாபநாசம் சோதனைச்சாவடியில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 8 மணியில் இருந்து பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள் தங்களை கோவிலுக்கு செல்ல உடனே அனுமதிக்குமாறு கூறி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினர், காலை 7.30 மணியில் இருந்து பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.
குடில்கள் அமைத்து...
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கினர். கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) வரையிலும் பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து வழிபடுவார்கள். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி வரையிலும் அகஸ்தியர்பட்டியில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.