அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தாிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 1-ந் தேதி அதிகாலை 3.25 மணியளவில் தொடங்கி 2-ந் தேதி அதிகாலை 1.05 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், நடந்து முடிந்த பவுர்ணமி நாளில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் இன்று கோவிலுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.
இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகல் கொளுத்திய கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் சிலர் கிரிவலம் சென்றனர்.