அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-07-28 18:14 GMT

சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பால்குட ஊர்வலம்

பெரம்பலூர் ரோஸ் நகர் காட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் நிர்மலா நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரியசாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் ரோஸ் நகரில் மகா சக்தி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்