சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

Update: 2023-01-21 12:55 GMT

தை அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

மாரியம்மன்

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்குள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், தொழில் அபிவிருத்தி அடையும், குடும்பம் செழிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

இதன் காரணமாக, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும் அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அம்மனை தரிசனம் செய்வதற்காக கார், பஸ், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.

நேர்த்திக்கடன்

இந்நிலையில், நேற்று தை அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சமயபுரம் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னி சட்டி ஏந்தியும், குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

இதேபோல், சமயபுரம் போஜீஸ்வரர் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மாகாளிகுடி உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்