சர்வ அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

வைகாசி சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

Update: 2022-05-30 06:03 GMT


புண்ணியத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் வைகாசி மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 5 மணி முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. கடலில் புனித நீராடிய பக்தர்கள் இறந்துபோன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம், சங்கல்ப பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

இவ்வாறு புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராட வடக்கு வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரத வீதி வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தீர்த்தமாடி சென்றனர்.தொடர்ந்து கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்ய பக்தர்கள் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக தரிசனம் செய்து சென்றனர்.

தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால் சர்வ அமாவாசையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்