பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த முதல் வார சிறப்பு வழிபாட்டில் காலை 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. அதன்பிறகு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு ராஜ அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. அத்துடன் கோவில் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜபெருமாள் கோவிலில் காலை 6 மணியளவில் சுவாமி, தாயார் அம்பாள், ஆஞ்சநேயருக்கு சந்தனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அனைத்து சாமிக்கும் கல் அங்கி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி மாத முதல் வாரத்தின் சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை சுவாமி மற்றும் ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பக்தர்கள் விரதம்
இதேபோல் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் புரட்டாசி விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடுகளில் வெங்கடாசலபதி படம் வைத்து பூஜை செய்து விரதம் தொடங்கினர். அப்போது அருகில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பழனி, சாணார்பட்டி
பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவில், வேணுகோபால பெருமாள் கோவில், ராமநாதநகர் லட்சுமி-நரசிம்மர் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், ஆயக்குடி கண்ணடிய பெருமாள் கோவில் என பழனி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். மேலும் அனைத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது.
சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் வேம்பார்பட்டி வேங்கடேச பெருமாள், கோபால்பட்டி கிருஷ்ணன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.