சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு நேற்று சுந்தரமகாலிங்கம் கோவிலில் சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-08-12 20:35 GMT

வத்திராயிருப்பு, 

ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு நேற்று சுந்தரமகாலிங்கம் கோவிலில் சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

6 நாட்கள் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலின் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு நேற்று முதல் வருகிற 17-ந் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

பாதுகாப்பு பணி

மேலும் நீர்ஓடை பகுதிகளில் இறங்க வேண்டாம் என்றும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்தவுடன் பக்தர்கள் அடிவாரப்பகுதிக்கு வர வேண்டும் என வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கார் மற்றும் பஸ் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் பக்தர்களை கண்காணிக்க 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய மலைபாதையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்