பெத்தநாயக்கன்பாளையம்:-
பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி வசிஷ்ட நதியை கடந்து சென்று நள்ளிரவு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிலில் நள்ளிரவு பூஜை
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையப்பட்டி வில்வனூர் பகுதியில் வசிஷ்ட நதி பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் மறுகரையில் மாயவ பெருமாள், சாமுண்டீஸ்வரி, கன்னிமார் முருகன் கோவில்கள் அமைந்துள்ளன.
இந்த கோவில் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 7 கிராம மக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வசிஷ்ட நதியில் தண்ணீரை கடந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் கூடையுடன் சென்றனர்.
பின்னர் கோவிலில் சாமிக்கு விடிய, விடிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். இந்த பகுதியில் ஓடும் வசிஷ்ட நதியின் குறுக்கே தண்ணீர் குறைவாக வருவதால், ஆற்றை கடந்து செல்ல முடிகிறது. தண்ணீர் அதிகமாக வரும் நாட்களில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று இந்த குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இந்த ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நள்ளிரவு முழுவதும் பெண் பக்தர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆற்று நீரை கடந்து சென்ற போது அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது தொடர்பாக ஒன்றிய கவுன்சிலர் தினேஷ் கூறியதாவது:-
இந்த வசிஷ்ட நதியின் குறுக்கே பாலம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் இந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் சனிக்கிழமைகள் தோறும் விசேஷ நாட்களில் பூஜைகள் நடைபெறுவதால், இந்த ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்பவர்களும், இந்த பகுதியில் வசிப்பவர்களும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு உயர் மட்ட மேம்பாலம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த வசிஷ்ட நதியின் குறுக்கே மேம்பாலம் கட்டித் தர வேண்டும். எங்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு கடந்த காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வரும் போது, சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறோம். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஆற்றை கடந்து செல்கிறோம். இதனால் பள்ளி குழந்தைகளும், பெண்களும் பெரும் அவதிக்குள்ளாகினார்கள். இரவு நேரங்களிலும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளதால் இந்த ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் திட்ட மதிப்பீடுடன் இந்த பணி கிடப்பில் உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.