பக்தர்கள் குளிக்க வருவது ராமேசுவரம் அக்னிதீர்த்தக்கடலிலா? கழிவுநீரிலா?

ராமேசுவரம் அக்னிதீர்த்தக்கடலில் குளிக்க பக்தர்கள் வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2022-10-26 19:16 GMT

ராமேசுவரம் அக்னிதீர்த்தக்கடலில் குளிக்க பக்தர்கள் வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

அக்னிதீர்த்தம்

ராமநாதபுரத்தை சேர்ந்த மார்க்கண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாட்டிலேயே மிகவும் புனிதமானதும், பழமையானதுமான சிவன் கோவிலில் ஒன்று ராமேசுவரத்தில் உள்ளது. ராமேசுவரம் சங்கு வடிவில் உள்ள ஒரு தீவு. ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்குவதற்காக இலங்கையில் இருந்து வந்த ராமர், சிவபெருமானை உருவாக்கி வழிபட்ட தலம் இது. இறந்தவர்களுக்கான சடங்குகளைச் செய்ய விரும்பும் இந்துக்களால் ராமேசுவரம், காசிக்கு இணையாக கருதப்படுகிறது. காசி மற்றும் ராமேசுவரம் செல்வது இந்துக்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். ராமேசுவரம் கோவிலிலும் அதைச் சுற்றியும் 64 தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. மிகப்பெரிய தீர்த்தமான அக்னிதீர்த்தம் கோவிலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள கடல் ஆகும்.

இந்தப் புனிதமான கடலில், ராமேசுவரம் நகரில் உள்ள கழிவுகள், குப்பைகள், கழிவுகள், திட மற்றும் திரவ கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்கப்படாமல் கடலில் விடப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுவதில்லை. கடந்த 2016-ம் ஆண்டில் 52.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமேசுவரத்தில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிதியில் 20.77 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்தன.

நடவடிக்கை தேவை

முழுமையாக நிறைவடையாததால், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் புனித நகரமான ராமேசுவரம் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை சந்தித்து வருகிறது. இது, இந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. எனவே அக்னிதீர்த்தக்கடலில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆர்.வெங்கடேஷ் ஆஜராகி, அக்னிதீர்த்தக்கடலில் கழிவுநீர், குப்பைகள் கலப்பது சம்பந்தமான புகைப்படங்களை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் கேள்வி

பின்னர் ஏற்கனவே இந்த கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என்பது தொடர்பான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், இதனையடுத்து நீதிபதிகள், இதனை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ராமேசுவரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்தியா முழுவதும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகின்றார்களா? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், உடனடி நடவடிக்கை மேற்கொண்டால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என கருத்து தெரிவித்தனர்.

பதில் அளிக்க உத்தரவு

இது தொடர்பான மற்றொரு வழக்கில் வக்கீல் கமிஷனரின் அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், ராமேசுவரம் சிவன் கோவில் இணை கமிஷனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்