தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2023-10-24 19:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு நடந்தது. முன்னதாக குடகனாற்றுக்கு சென்று கரகம் பாவித்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு சேர்வை ஆட்டத்துடன் சாமிகளை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

அதன் பிறகு சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கையில் காப்பு கட்டி விரதம் இருந்த ஆண், பெண் என 25 பக்தர்கள் கோவில் முன்பாக வரிசையாக அமர்ந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி ஆணி அடித்த காலணியை காலில் அணிந்தபடி விரதம் இருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பின்பு சேர்வை ஆட்டத்துடன் மேள வாத்தியங்கள் முழங்கியது. பக்தி பரவசத்துடன் ஆடியபடி வந்த பூசாரி கோவில் முன்பு அமர்ந்திருந்த பக்தர்களின் ஒவ்வொருவர் தலையிலும் தேங்காய்களை உடைத்தார். அப்போது பெண் பக்தர்கள் பக்தி பரவசத்தில் குலவையிட்டனர். விழாவில் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்