காலணி அணிந்து வந்தவர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்

ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் காலணி அணிந்து வந்தவர்களுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-10 18:10 GMT

ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் காலணி அணிந்து வந்தவர்களுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலணி அணிந்து வந்தனர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டும், அதன் அருகில் இருந்து செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜலகண்டேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் வழியாக காலணி அணிந்து 2 பேர் கோவிலுக்குள் சென்றனர். அவர்கள் அங்குள்ள கல்யாண மண்டபம் அருகே காலணியுடன் வலம் வந்தனர். இதனை கண்ட பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் ஏன் காலணி அணிந்து வந்திருக்கிறீர்கள் வெளியே கழட்டி விட்டு வரவும் என்று கேட்டுள்ளனர்.

வாக்குவாதம்

அப்போது அவர்கள் நாங்கள் இருவரும் தொல்பொருள் துறை அதிகாரிகள் என்று கூறி அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிகாரிகள் என கூறிக்கொண்டு காலணி அணிந்து கோவிலுக்குள் 2 பேர் இருந்ததை செல்போனில் பக்தர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனால் ஆவேசமடைந்த வேலூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள், இது தொடர்பாக வேலூர் தொல்பொருள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். காலணி அணிந்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

விசாரணை

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தொல்பொருள் துறை அதிகாரிகள், யார்? கோவிலுக்குள் செருப்பு அணிந்து உள்ளே சென்றார்கள் என்பது தெரியவில்லை‌. அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடத்தில் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொல்பொருள் துறை அதிகாரிகள் கூறுகையில், கோவிலுக்குள் அதிகாரிகள் யாரும் ஆய்வுக்கு வரவில்லை. வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்