அக்னி தீர்த்தக் கடலில் கடல் நீர் சற்று உள்வாங்கியதால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம்..!
அக்னி தீர்த்தக் கடலில் கடல் நீர் சற்று உள்வாங்கியதால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம் அடைந்தனர்.
ராமேஸ்வரம்,
புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது. ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜைகள் செய்து, பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள். அதிலும் ஆடி, தை அமாவாசை நாட்கள், புரட்டாசி மாத மகாளய அமாவாசையின்போது பல லட்சம் பேர் திரள்வார்கள்.
இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்னம் உள்ளனர். இந்நிலையில், அக்னி தீர்த்தகடற்கரையில் வழக்கத்தை விட கடல் நீர் சுமார் 20 மீட்டர் உள்வாங்கியுள்ளதால் பக்தர்கள் புனித நீராட சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கடல் உள்வாகியதால் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் தெரிந்தன. அதனை சில பக்தர்கள் ஆர்வமுடன் சென்று பார்த்தனர்.
இதுபற்றி பக்தர்கள் கூறும்போது, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் கடலில் இயற்கையாக சில மாற்றங்கள் நிகழும். அப்போது கடல் உள்வாங்கி செல்லும், மீண்டும் பழைய நிலைக்கு வரும். இதற்காக பயப்பட தேவையில்லை. இது வழக்கமான ஒரு நிகழ்வுதான் என தெரிவித்தனர்.