தமிழ்நாட்டில் கோவில்கள் சீரமைப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் கோவில்கள் சீரமைக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது தான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
34 ஜோடிகளுக்கு திருமணம்
இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையில் கோவில்கள் நிதி மூலம் ஆண்டுக்கு 500 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு 600 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 219 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 34 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பின்னர் மணமக்கள் மீது பூக்களை தூவி ஆசீர்வதித்து, 'வாட்ச்'சை பரிசாக வழங்கி வாழ்த்து கூறினார்.
அமைச்சர் சேகர்பாபுக்கு பாராட்டு
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருகோவில்கள் சார்பில் திருமண விழாவை மிகச் சிறப்பாக, எப்போதும் என்னால் 'செயல்பாபு' என்று அழைக்கப்படக்கூடிய அமைச்சர் சேகர்பாபு முன்னின்று ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காக நான் வழக்கம் போல் அவரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கி நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, கல்வி, தொழில், பொருளாதாரம், சமூகம், சமயம் ஆகிய அனைத்து துறைகளிலும், அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளிவைக்கக்கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது. 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற கருத்தியல் என்பது இதுதான்.
நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது.
கருணாநிதியின் வசனம்
கோவில்கள் மிகச் சிறப்பாகவும், சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகதான் இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான் என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. 'கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது' என்று 'பராசக்தி' திரைப்படத்தில் அன்றைக்கு தலைவர் கருணாநிதி வசனம் எழுதினார். அப்படி கோவில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதில் கருணாநிதி எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு அதே வழியில் பின்பற்றிக்கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு கோவில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 43 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. பழமையான கோவில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை 3,986 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 கோவில் களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அழகான தமிழ் பெயர்
ஏழை இணையர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோவில்களுக்கு திருகுடமுழுக்கு, 764 கோவில்களில் அன்னதானம், 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோவில்களில் மருத்துவ மையம், 15 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலமாக கோவில்கள் சீரமைகின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் நம்முடைய அரசும் விரும்புகிறது. இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்.
மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள், தமிழ் உணர்வை அந்த குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச்சொல்லியிருக்கும், "வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்'' இருந்து நீங்கள் பாடுபடுங்கள், பணியாற்றுங்கள், உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க. எம்.பி.கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, தி.மு.க. எம்.எல்.ஏ. மயிலை வேலு, சுற்றுலா- பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், கமிஷனர் முரளிதரன் மற்றும் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
இறை வணக்க பாடலுடன் தொடங்கிய விழா
34 ஜோடிகளுக்கான திருமண விழா இறை வணக்க பாடலுடன் தொடங்கியது. இப்பாடலை ஓதுவார்கள் சத்குரு நாதர், பேச்சியப்பன் ஆகியோர் பாடினார்கள். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் திருமண விழாவில் மங்கள இசை முழங்க 2 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாலி எடுத்து கொடுத்தார். அந்த நேரத்தில், மேடையில் அமர்ந்திருந்த மற்ற ஜோடிகள் தாலி கட்டிக்கொண்டனர்.
அப்போது, மணமக்கள் வாழ்க... என்று அனைவரும் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். இறை வணக்க பாடலுடன் தொடங்கிய திருமண விழா தேசிய கீதத்துடன் முடிவடைந்தது.
ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசை பொருட்கள்
திருமண விழாவில் தாலி கயிற்றில் 4 கிராம் தங்கம், மணமகனுக்கு பட்டு வேட்டி-சட்டை, மணப்பெண்ணுக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது. இத்துடன் கட்டில், மெத்தை, பீரோ, கியாஸ் அடுப்பு, கிரைண்டர், மிக்சி, குக்கர், அயன் பாக்ஸ், எவர் சில்வர் குடம், தவலை, தட்டு, டம்ளர், கரண்டி உள்பட சமையல் பாத்திரங்கள், காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளையிலான பூஜை பொருட்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பீல் சீர் வரிசை பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த சீர்வரிசை பொருட்களை வழங்கும் அடையாளமாக ஒரு ஜோடிக்கு இப்பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அந்த ஜோடி சீர்வரிசை பொருட்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.