'செல்பி' மோகத்தால் செல்போனை இழந்த பக்தர்
பழனி முருகன் கோவிலில் ‘செல்பி' எடுத்த பக்தரிடம் செல்போனை குரங்கு ஒன்று பறித்து சென்றது.
'செல்பி' மோகம்
இன்றைய காலத்தில் 'செல்போன் இல்லாத மனிதன் செல்லாத மனிதன் ஆகி விட்டான்' என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செல்போன்கள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் பெரும்பாலானோரின் செல்போன்களை, சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்து உள்ளன. குறிப்பாக 'செல்பி' எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் மோகம் அதிகரித்துள்ளது.
ஆன்மிக தலங்கள், சுற்றுலா இடங்களுக்கு சென்றால் அவர்களின் தொல்லைக்கு எல்லையே இல்லாமல் போய் விடுகிறது. 'செல்பி' எடுத்து வாட்ஸ்அப், முகநூலில் பதிவிடுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பழனி முருகன் கோவில்
அந்தவகையில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசனம் செய்து முடித்த பின்பு, பழனிக்கு வந்ததற்கான அடையாளத்துக்காக குடும்பத்துடன் புகைப்படம், 'செல்பி' எடுக்கின்றனர்.
குறிப்பாக கோவில் வெளிப்பிரகாரம், படிப்பாதை, ரோப்கார் ஆகிய இடங்களில் நின்று அதிகமாக 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். சிலர் சுவர்களில் ஏறி ஆபத்தான முறையில் நின்றும் 'செல்பி' எடுப்பதை பார்க்கலாம்.
பழனிக்கு வரும் பக்தர்கள் 'செல்பி' எடுத்து மகிழ்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் தண்டபாணி நிலையம், மின்இழுவை ரெயில் ஆகிய இடங்களில் 'செல்பி' ஸ்பாட்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு பக்தர்கள் நின்று 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.
குரங்குடன் 'செல்பி'
பழனி கோவில் பகுதியில் 'செல்பி', புகைப்படம் எடுக்கும்போது, பக்தர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பலர் 'செல்பி' எடுக்கும்போது தங்களின் பொருட்களை கவனிக்க தவறுவதால் அதை பறிகொடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
அந்தவகையில் பழனி கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் குரங்குடன் நின்று 'செல்பி' எடுத்தபோது தனது செல்போனை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியது. அதாவது பழனி கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர் ஒருவர், அங்கு வந்த குரங்குடன் நின்று 'செல்பி' எடுக்க முயன்றார்.
பழம், பிஸ்கட்
அப்போது அந்த குரங்கு திடீரென பாய்ந்து, பக்தரின் செல்போனை பறித்து கொண்டு கோவில் கட்டிடத்தில் ஏறி சென்றது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் பணியாளர்களிடம் தனது செல்போனை குரங்கு பறித்து சென்றது குறித்து தெரிவித்தார்.
அதையடுத்து அவர்கள் பழம், பிஸ்கட் என பல்வேறு உணவு பொருட்களை குரங்கிற்கு காட்டி செல்போனை பெற முயற்சித்தனர். ஆனால் குரங்கு எதற்கும் மயங்கவில்லை.
மனிதர்கள் கையில் வைத்து நோண்டி கொண்டிருக்கும் இந்த செல்போன், உணவை காட்டிலும் உயர்ந்தது என்று கருதி தூக்கி கொண்டு அங்கும், இங்குமாக குரங்கு ஓடியது. அது உணவு பொருளாக இருக்கலாம் என்று கருதி கடித்தும் பார்த்தது.
செல்போனுடன் மாயம்
ஒரு கட்டத்தில், செல்போனுடன் அந்த குரங்கு மரத்துக்கு மரம் தாவி விளையாடியது. அந்த சமயத்திலாவது செல்போனை கீழே போடுமா? என்று பறி கொடுத்த பக்தரும், கோவில் பணியாளர்களும் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கடைசி வரை கீழே போடாமல், செல்போனை கைகளில் வைத்தபடி அவர்களிடம் இருந்து விடைபெற்று குரங்கு விலகி சென்று விட்டது. அதாவது அந்த இடத்தில் இருந்து குரங்கு மாயமாக மறைந்தது. அதன்பிறகு அந்த பக்தர் கவலையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். குரங்கு கையில் கிடைத்த பூமாலையின் நிலைமை எப்படி இருக்குமோ?, அப்படி தான் செல்போனின் நிலையும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
சமூக வலைத்தளத்தில் வைரல்
இதற்கிடையே செல்போனை குரங்கு தூக்கி சென்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, பழனி முருகன் கோவில் பகுதியில் குரங்குகள் பல சுற்றி திரிகின்றன. இவை அங்கு கிடைக்கும் உணவு பொருட்களை தின்று வாழ்கின்றன. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்கை படம் பிடிப்பது, அதனுடன் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த சமயத்தில் பலர் தங்கள் பணப்பை, செல்போன் போன்றவற்றை குரங்கிடம் பறிகொடுத்து வருகின்றனர். சில நேரங்களில் குரங்கு பக்தர்களை தாக்கும் சம்பவமும் அரங்கேறுகிறது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம் என்றனர்.