சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: தேவூர் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு ரெயில்வே சுரங்கப்பாதையில் பள்ளிக்கூட பஸ் சிக்கியதால் பரபரப்பு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேட்டூரில் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ரெயில்வே சுரங்கப்பாதையில் பள்ளிக்கூட பஸ் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-30 20:42 GMT

மாவட்டத்தில் மழை

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுவும் குறிப்பாக எடப்பாடி, ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர் பகுதியில் மிதமானது முதல் கனமழை நேற்று கொட்டி தீர்த்தது.

மேட்டூர் பகுதியில் பெய்த மழையால் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட மாதையன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

சுரங்கப்பாதையில் சிக்கிய பஸ்

ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் பெய்த மழையால் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி உள்ளன. சேலம்- சென்னை ெரயில்வே தண்டவாளம், சேலம்- மேட்டூர் ரெயில்வே தண்டவாளம் ஆகியவற்றின் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

சேலம்- மேட்டூர் ரெயில்வே தண்டவாள சுரங்கப்பாதையில் தேங்கி கிடந்த மழைவெள்ளத்தில் தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று சிக்கியது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

டிராக்டர் கட்டி இழுத்தனர்

உடனே டிராக்டர் கொண்டு வரப்பட்டு கயிறு கட்டி பள்ளிக்கூட பஸ் பத்திரமாக மீட்கப்பட்டது. அதன்பிறகுதான் பஸ்சில் இருந்த மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன்பிறகு மினிபஸ் ஒன்றும் சிக்கி கொண்டது. அதுவும் டிராக்டர் கட்டி இழுக்கப்பட்டது. அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே துறையும், வருவாய்த்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு

ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஆத்துப்பாலம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் துண்டிக்கப்பட்டது.

இதனால் தரைப்பாலம் வழியாக கடந்து செல்லும் மலைமாரியம்மன் கோவில், மலங்காடு, வெள்ளூற்று பெருமாள் கோவில், கிழக்கு ஓலப்பாளையம், மேற்கு ஓலப்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதி விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்த சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் தடுப்பு அமைத்து அந்த பகுதியில் பாதுகாப்பை ஏற்படுத்தினர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் போக்குவரத்து சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

தாரமங்கலம்

காவிரி உபரிநீர், பி.என்.பட்டி, காளிப்பட்டி, சின்னேரி, திப்பம்பட்டி, மானத்தாள், தொளசம்பட்டி, பெரியேரிப்பட்டி, காடம்பட்டி ஏரிகள் நிரம்பி தாரமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. தாரமங்கலம் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏரி நீரை குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்ற மக்கள் தற்காலிக வழித்தடத்தை ஏற்படுத்தி தண்ணீரை வடிய வைத்தனர்.

கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் ஏரியானது தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஒன்றியக்குழு தலைவர் மணி, உபரிநீரை திறந்து வைத்தார். இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, கூட்டுறவு சங்க தலைவர் மணி, மீனவர் சங்க தலைவர் சீரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் ஜலகண்டாபுரம்- சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சாலையில் சென்ற வாகனங்கள் சறுக்கி விழுந்ததில் அதில் பயணம் செய்தவர்கள் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழைநீருடன், கழிவுநீரும் கலந்து ஓடியதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. மேலும் இந்த பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்