வளர்ச்சி பணிகளை களஆய்வு செய்ய வேண்டும்
சட்டமன்ற உறுப்பினர்களால் பரிந்துரை செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளை களஆய்வு செய்து தோராய மதிப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர், செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர், திண்டிவனம், மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான நீண்டகால கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட பரிந்துரை பட்டியல்களில் உள்ள பணிகளை ஆய்வு செய்து உரிய மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஏதுவாக அனைத்துத்துறைகளின் உயர் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
களஆய்வு
அதனடிப்படையில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி மதகுகளை புதுப்பித்தல், பாசன வாய்க்காலை தூர்வாரி சீர்செய்தல், வாய்க்கால் கரையை மேம்படுத்துதல் போன்ற பணிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் வட்டார மருத்துவமனை ஏற்படுத்துதல், மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவமனையை தரம் உயர்த்துதல், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்துதல், நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டுதல், படகு குழாம் அமைத்தல், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் புதிய மேம்பாலம், கூடுதல் சாலை, தடுப்புச்சுவர் கட்டுதல், உயர்கல்வித்துறையின் சார்பில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்துதல், கூடுதல் வகுப்பறை கட்டுதல், பேரூராட்சியின் சார்பில் மின்மயானம், புதிய பஸ் நிலையம், சந்தை அமைத்தல், நகராட்சித்துறை சார்பில் குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்தல், சந்தை, புதிய தொழிற்சாலை அமைத்தல், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, கால்வாய்களை புனரமைத்தல் போன்றவை குறித்து கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களால் பொதுமக்களின் நலன் கருதி பரிந்துரை செய்த பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரடியாக களஆய்வு செய்து தோராய மதிப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும். . மக்களின் நலன் கருதி முதல்-அமைச்சரால் சிறப்பு கவனத்துடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த அரசு அலுவலர்கள் தனிக்கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதாதேவி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.