பள்ளிகொண்டா பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்
பள்ளிகொண்டா பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள் செய்ய பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் சுபபிரியா தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வசிம்அக்ரம் வரவேற்று பேசினார். இதில் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொது நிதியிலிருந்து ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்து சிறு பாலம் கட்டுதல், சமுதாய கூடத்தை சீரமைப்பது, அனைத்து வார்டுகளிலும் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவது, கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பள்ளிகொண்டா ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ள கட்டுபுடி சாலையை சீரமைக்கவும், தடுப்புச் சுவர் அமைக்கவும் ரூ.30 லட்சத்திற்கு அங்கீகாரம் கோரப்பட்டது. ரூ.26 லட்சம் மதிப்பில் குடிநீர் பற்றாக்குறை உள்ள 8 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, 15-வது நிதிக் குழுவில் ரூ.49.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவு படுத்தவது உள்ளிட்ட பணிகளை மொத்தம் ரூ.1½ கோடியில் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கணினி இயக்குனர் சந்தோஷ் நன்றி கூறினார்.