குடவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
குடவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
குடவாசல் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
குடவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி குடவாசல் அருகே உள்ள 52 புதுக்குடி தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் நடக்கும் 100 வீடுகள் பழுது பார்த்தல் பணியை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து செருகளத்தூர், கண்டிரமாணிக்கம், கூந்தலூர், சற்குணேஸ்வரபுரம், வயலூர், அன்னியூர், திருவீழிமிழலை ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் ஊராட்சி கட்டிடங்கள் கட்டும்பணி, குளம் தூர்வாரும் பணிகள், பொது வினியோக கட்டிடம், அங்கன்வாடி கட்டிட பணிகள், சமையல்கூடம், பெண்கள் கழிவறை கட்டுமானப்பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ரூ.5 கோடியில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தில் நடக்கும் கூந்தலூர்-வடமட்டம் சாலைப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், விரைவில் பணியை முடிக்க உத்தரவிட்டார். அதேபோல் திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணி, வட்டார பொது சுகாதார நிலைய கட்டிடப்பணி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து தர அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், சாமிநாதன், குடவாசல் தாசில்தார் தேவகி, ஊராட்சி தலைவர்கள் 52 புதுக்குடி கண்ணன், செருகளத்தூர் மணி, கண்டிரமாணிக்கம் தங்கராசு, கூந்தலூர் ஜெயாஇளையராஜா, வயலூர் மீனாட்சிசுந்தரம், அன்னியூர் சுப்பிரமணியன், திருவீழிமிழலை கவிதாவரதராஜன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.