ரூ.41¼ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.41¼ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-06 19:30 GMT

சூளகிரி:-

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.41¼ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சூளகிரி ஒன்றியம் இம்மிடிநாயக்கபள்ளி ஊராட்சி பெரிய பேடப்பள்ளியில், வட்டார நாற்றுப்பண்ணை 2½ ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை, ஜம்புநாவல், புளியன், புங்கன், சில்வர், தேக்கு, கொய்யா, நொச்சி, வேம்பு மரச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும், உற்பத்தி செய்யும் விதம் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

மரக்கன்றுகள் நடும் பணி

மேலும் சாலையோரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவற்றை தொடர்ந்து கண்காணித்து, நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இம்மிடிநாயக்கனபள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சென்னப்பள்ளி ஊராட்சி் கிடைமட்ட உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும், குப்பை சேகரிக்கும் பணி, தரம் பிரிக்கும் பணிகளையும், சேமிப்பு கிடங்கையும், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள், வட்டார அளவிலான நாற்றங்கால் அமைக்கும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

காலை உணவு

பின்னர் கரகனப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், உமாசங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்