வளர்ச்சி திட்ட பணிகள்

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-02-21 18:45 GMT


மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்குமிடம், சிகிச்சை அளிக்குமிடம், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்குமிடம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குனருமான அமுதவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருவிழந்தூர் அருகே பொட்டைவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை ஆய்வு செய்தார். பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கினார்.

வளர்ச்சி பணிகள்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் கட்டும் பணியையும், ரூ.4.75 லட்சம் செலவில் மாணவர்களுக்கு கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறையையும் மற்றும் அரசின் திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஆய்வு கூட்டம்

அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது. பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரம் மதிப்பில் செல்போன் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்