வளர்ச்சித் திட்ட பணிகள் திருப்தியாக இல்லை

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் திருப்தியாக இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2023-09-06 13:01 GMT

ஆய்வு கூட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் நடைபெற்று வரும் சாலை, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கமிஷனர், உதவி கமிஷனர்கள், மண்டலக்குழு தலைவர்கள், ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

பாதாள சாக்கடை பணிகள்

வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். சாலை அமைப்பதற்கு முன்பு கால்வாய் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கால்வாய் பணிகளை முடித்த பின்னர் சாலை அமைத்தால் மீண்டும் அந்த சாலையை தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படாது.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும். மேலும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஒப்பந்ததாரர்கள் கண்டிப்பாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பணிகள் திருப்தியாக இல்லை

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் திருப்தியாக இல்லை. அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். மாநகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாதந்தோறும் 6-ந் தேதி நடத்தப்படும்.

அடுத்த மாதம் நடக்கும் ஆய்வு கூட்டத்துக்குள் சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை பகுதிவாரியாக செய்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி பகுதியில் பாதாள சாக்கடை பணிகளில் ஈடுபடும் தனியார் கட்டுமான நிறுவனம் சரியாக பணிகள் செய்யவில்லை. அந்த நிறுவனத்திடம் பணிகளை முழுமையாக செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் வழக்கு வருகிற 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு காவிரி நதிநீர் வழக்கை விசாரிக்கும் நாளில் தமிழகத்தின் வாதங்களை முன்வைப்போம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்