ஆட்சியில் இல்லாமலேயே சாதித்தது பா.ம.க.வின் வளர்ச்சி அரசியல் - அன்புமணி ராமதாஸ்

அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது. தி.மு.க.வை மக்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் ஆட்சியில் இல்லாமலேயே சாதித்தது பா.ம.க.வின் வளர்ச்சி அரசியல் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2022-12-30 23:41 GMT

சிறப்பு பொதுக்குழு

புதுச்சேரியில் நேற்று நடந்த பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

வருகிற புதிய ஆண்டு நமக்கு முக்கியமான ஆண்டாகும். தேர்தல் பணிக்கு நாம் தயாராக வேண்டும். இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக பா.ம.க. உள்ளது. அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்வதுதான் நமது நோக்கம். பா.ம.க. வேகமாக வளர்ந்து வருகிறது.

வளர்ச்சி அரசியல்

நாம் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். பா.ம.க. இல்லாவிட்டால் மக்களுக்கு சமச்சீர் கல்வி கிடைத்து இருக்காது. லாட்டரி ஒழிந்து இருக்காது. 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து இருக்காது. இந்தியாவில் 108 ஆம்புலன்சு வந்து இருக்காது. மது ஒழிப்பு பிரசாரமும் இருந்து இருக்காது. புகையிலை ஒழிந்து இருக்காது.

இப்படி ஆட்சியில் இல்லாமலேயே எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டால் அதற்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியாகிறது. இதுதான் வளர்ச்சி அரசியல். வெற்றி அரசியல். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்தால் அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். ஆனால் ஊடகங்கள் கூட்டணி என்று சொல்கிறார்கள். நமது இலக்கு தமிழகத்தின் வளர்ச்சிதான்.

விளம்பர அரசியல்

சிலர் விளம்பர அரசியல் செய்கிறார்கள். என்னிடம் சிலர், ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சுட்டிக்காட்டி தினமும் பேட்டி கொடுகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள் என்கிறார்கள். சிலர் வாட்ச்-ஐ காட்டுகிறார்கள். அது நமக்கு தேவையில்லை. மக்கள் மத்தியில் நமக்கான சூழ்நிலை நிலவுகிறது.

அ.தி.மு.க. 4 ஆக உடைந்து கிடக்கிறது. தி.மு.க. மீதான மக்களின் விமர்சனம் உங்களுக்கு தெரியும். மற்றவர்கள் சத்தம்தான் போடுகிறார்கள்.

தமிழகத்தில் 2 பெரிய சாதிகள் உள்ளன. ஒன்று ஆதிதிராவிடர். மற்றொன்று வன்னியர். இந்த இரு சமூகத்தினரும் தலா 20 சதவீதம் உள்ளனர். அதில் ஆதிதிராவிட மக்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் இன்னும் முன்னேற வேண்டும். இந்த 2 சமுதாயமும் வளர்ந்தால்தான் தமிழகம் முன்னேறும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

டாக்டர் ராமதாஸ் எழுதிய ஆத்திசூடி

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வையின் ஆத்திசூடியை போன்று தானே எழுதிய ஆத்திசூடி ஒன்றை படித்தார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்