நாகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்பு குழு கூட்டம்

நாகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-28 19:15 GMT

நாகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கண்காணிப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். இணைத்தலைவர் ராமலிங்கம் எம்.பி., கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குழு தலைவர் செல்வராஜ் எம்.பி. கூறியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள்

இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். நாகை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மத்திய அரசால் அறிவிக்கப்படுகிற, திட்டங்கள், செம்மையாக செய்யப்படுகிறதா? உரிய காலத்தில் முடிக்கப்படுகிறதா? நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என கண்காணிக்கக் கூடிய அமைப்புதான் இந்த கண்காணிப்பு குழு.

மத்திய அரசு வழங்குகின்ற திட்டங்கள் மக்களிடையே எந்த அளவிற்கு சென்றிருக்கின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பின்னர் 3 மாதங்களுக்கு ஒருமுறை இக்கூட்டமானது நடைபெறும். நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்து துறை சார்பில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக நடந்த விழாவில் மாற்றுத் திறனாளி நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 86 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 ஆயிரத்து 212 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷா நவாஸ் (நாகை), நாகைமாலி (கீழ்வேளூர்), பன்னீர்செல்வம் (சீர்காழி), மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரித்திவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்