தேவார செப்பேடுகளை சட்டநாதர் கோவிலிலேயே வைத்து பாதுகாக்கவேண்டும் -வைகோ வலியுறுத்தல்

தேவார செப்பேடுகளை சட்டநாதர் கோவிலிலேயே வைத்து பாதுகாக்கவேண்டும் வைகோ வலியுறுத்தல்.

Update: 2023-04-20 18:40 GMT

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவிலில் கடந்த 16-ந்தேதியன்று, பூமிக்கு அடியில் இருந்து 23 செப்பு திருமேனிகள், 412 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்கது, செப்பேடுகள்தான். சோழர்கள் காலத்தைச் சேர்ந்த அந்த செப்பேடுகளில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற அப்பர் சுவாமிகள் ஆகியோரின் தேவாரப்பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பாடல்கள் பொறிக்கப்பட்ட செப்பேடுகள் 750 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்து நம் காலத்தில் வெளிப்பட்டது, உண்மையில் வரலாற்று சம்பவம் ஆகும்.

இந்த வரலாற்று ஆதாரமான செப்பேடுகள், சீர்காழி சட்டநாதர் கோவிலிலேயே வைத்து பாதுகாக்கப்படவேண்டும். அங்கு சிறப்பு அறை கட்டப்பட்டு அதில் செப்பேடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கவேண்டும். இதன் மூலம் மக்களிடையே தமிழ்மொழி பற்றிய பெருமித உணர்வு வளர்ந்து ஓங்கும். சோழர்கள் வரலாறு பற்றிய விழிப்புணர்வு மேலும் பரவும். இந்த மண்ணில் தமிழை எப்படி எல்லாம் மன்னர்கள் வளர்த்துள்ளனர் என்பது தெரிய வரும்.

கும்பாபிஷேகத்துக்கு பின்னர் கோவிலிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தருமையாதீனத்தின் குருமகா சன்னிதானம் ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழ் வளர்ப்பதில் அந்த ஆதீனம் காட்டி வரும் அக்கறை போற்றுதலுக்குரியது. சீர்காழி சட்டநாதர் கோவிலில் அருங்காட்சியகம் அமைத்திட, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆதீனத்திற்கு அனுமதி அளிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்