தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.;
தேவகோட்டை,
தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மாடகோட்டை மற்றும் புத்துரணி குரூப் பாசன விவசாயிகள், பெண்களுடன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுடன் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாசன விவசாயிகள் கூறும் போது, முத்துக்கண்மாய் 1200 ஏக்கர் பாசன பரப்பு உடையது. அந்த கண்மாய்க்கு தேனாற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வந்து உள்ளது. தற்போது ஆற்றின் குறுக்கே தடுப்பணை போட்டதால் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.