ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு
பாலக்கோடு, மதிகோன்பாளையம் பகுதிகளில் பண்ணை குட்டைகளில் வளர்க்கப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அலுவலர்கள் அழித்தனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு, மதிகோன்பாளையம் பகுதிகளில் பண்ணை குட்டைகளில் வளர்க்கப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அலுவலர்கள் அழித்தனர்.
கெளுத்தி மீன்கள் வளர்ப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், மதிகோன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தாசில்தார் ராஜசேகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமணன், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
இந்த குழுவினர் நேற்று பாலக்கோடு, காவாப்பட்டி, மல்லசமுத்திரம், சிக்கார்த்தனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பண்ணை குட்டைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சிக்கார்த்தனஅள்ளியை சேர்ந்த செல்வம், காவாப்பட்டி குமார் ஆகியோர் பண்ணை குட்டைகளில் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் வளர்ப்பது தெரியவந்தது.
எச்சரிக்கை
இதையடுத்து குட்டைகளில் வளர்க்கப்பட்ட 2 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதே பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி மீன்களை கொட்டி அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல் மதிகோன்பாளையம் பகுதியில் பண்ணை குட்டைகளில் மீன்வளத்துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் பண்ணை குட்டைகளில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சிலர் வளர்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த குட்டைகள் மற்றும் மீன்கள் அழிக்கப்பட்டன. தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தவர்கள் குறித்து மீன்வளத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.