2500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
ஜவ்வாது மலையில் 2500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.;
போளூர்
வனச்சரக அலுவலர் ஜெயவேல் தலைமையில் வனவர் ராஜேஷ் மற்றும் வன ஊழியர்கள் செல்வன், ஜெயமுருகன் ஆகியோர் ஜவ்வாது மலை தென் மலை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஓடைப்பகுதியில் 5 பேர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செங்கம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் (வயது 40) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து வனத்துறை அங்கு 6 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். சாராயம் காய்ச்சிய சுந்தரேசனை கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய மலை கிராமத்தை சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர்.
மேலும் போளூர் வனச்சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர். ஜவ்வாது மலை மூலக்காடு கிழக்கு பீட் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.