217 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

கறம்பக்குடி, ஆலங்குடியில் 217 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-16 19:08 GMT

200 லிட்டர் சாராயம் பறிமுதல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்ததில் 22 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சாராய சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி கறம்பக்குடி பகுதியில் மதுவிலக்கு மற்றும் தனிப்படை போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கறம்பக்குடி சாத்தான் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது தோட்டத்தில் உள்ள சமாதி கொட்டகையில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் பிளாஸ்டிக் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை கறம்பக்குடி கிராம நிர்வாக அதிகாரி சக்கரை முன்னிலையில் போலீசார் அழித்தனர்.

கைது

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கறம்பக்குடி மேற்கு தெருவை சேர்ந்த தனபால் (வயது 40) என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாராய சோதனை நடைபெற்று வருகிறது.

ஆலங்குடி

ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குடி அருகே உள்ள அழகன்விடுதியை சேர்ந்த அழகன் என்கிற அழகர்சாமி (வயது 51) என்பவர் பறையன்குளத்தில் 15 லிட்டர் சாராயம் ஊறல் போட்டிருந்தார். மேலும் சாராயத்தை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் 15 லிட்டர் சாராய ஊறலை கீழ கொட்டி அழித்தனர். பின்னர் அழகர்சாமியை கைது செய்து, 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்