10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை- ஈரோட்டில் முத்தரசன் பேட்டி
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
ஈரோடு
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கூட்டம்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாஸ்கர், துணைத்தலைவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ., பத்மாவதி, வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-
போராட்டம்
நாட்டில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாத காரணத்தினால் நாளுக்கு நாள் விலைவாசி உயருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் ஊழல், குடும்ப அரசியல் என்று பேசுகிறார். அவர் செய்த திட்டம் பற்றி பேச முடியவில்லை. மத்திய தணிக்கை குழு வெளியிட்ட தகவலின்படி மத்திய அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. இதை கண்டித்து வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 13-ந் தேதியும், 14-ந் தேதி நகர, ஒன்றியங்கள் அளவில் மறியல் போராட்டமும் நடத்தப்படும்.
தமிழக அரசுக்கு எதிராக...
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு அரசியல் செய்கிறார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கான கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் தலைவர் நியமிக்கப்பட்டால்தான், தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்கும். கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரைபோல செயல்படுகிறார் என்று ஜனாதிபதியிடம் தமிழக எம்.பி.க்கள் புகார் மனு வழங்கியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீட் தேர்வு பொது பிரச்சினை. அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். தி.மு.க. கூட்டணியில் எந்தவித சலசலப்பும் இல்லை. பலமாகதான் உள்ளது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
இந்த பேட்டியின்போது கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.