சினிமா ஆசை...! ஆபாச படம் எடுத்து ஏமாற்றிய டைரக்டர்...! 300 பெண்கள் பாதிப்பு...!
சினிமா ஆசையில் வரும் பெண்களை கவர்ச்சியாக நிற்க வைத்து படம் எடுப்பதும், பிறகு அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து ஆயிரகணக்கான வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளது.;
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வீரப்பன் பாளையத்தை சேர்ந்தவர் வேல் சத்ரியன் (வயது 38). இவர் சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமா சூட்டிங் எடுப்பதாக கூறி வந்தார். அதே அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி (23) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இதில் சேலம் இரும்பாலையை பகுதியை சேர்ந்தவர் கனகா (30), கணவரை பிரிந்த இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை இணைய தளத்தில் தேடி வந்தார். அப்போது துணை நடிகை தேவை என்று சமூக வலைதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதில் சினிமா நிறுவன அலுவலகம் சேலம் ஸ்டேட் பாங்க் காலனி என்ற முகவரி இருந்தது. இதையடுத்து அங்கு சென்ற கனகா துணை நடிகை வாய்ப்பு கேட்டார்.
அங்கிருந்த வேலுசத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய 2 பேரும் தாங்கள் தயாரிக்கும் படத்தில் துணை நடிகையாக நடிக்க வைக்க ரூ.30 ஆயிரம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறினார்.
இதையடுத்து அந்த அலுவலகத்தில் அவரை உதவியாளராக பணியில் சேர்த்து கொண்டனர். கடந்த 3 மாதங்களாக அந்த அலுவலகத்தில் கனகா வேலை செய்து வந்தார். அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கனகா சம்பளம் கேட்டபோது ஆபாச படத்தில் நடித்தால் பணம் தருவதாக கூறினர்.
இதையடுத்து வேலையை விட்டு விட்டு வெளியில் வந்த கனகா சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், சில பெண்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாகவும், அறை முழுவதும் ஆபாச படங்களை ஒட்டி வைத்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
உடனே அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கிருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கடந்த 8 மாதங்களாக 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து சீரழித்தது தெரிய வந்தது.
மேலும் சினிமா ஆசைகாட்டி அங்கு வந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்கள், லேப்டாப், கேமராக்கள், பெண் டிரைவ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரிடம் சிக்கிய ஹார்டு டிஸ்குகளில் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சி அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இயக்குனர் வேல் சத்ரியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது, எடப்பாடியை சேர்ந்த வேல் சத்ரியன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோ என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுப்பதாக அறிவித்து அதில் நடிக்க நடிகைகள் தேர்வை நடத்தி உள்ளார்.
எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்று வந்த இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கி உள்ளார். மேலும் அந்த இளம்பெண்களின் பெற்றோரிடமும் தான் எடுக்கும் படம் தேசிய விருதுக்கான படம் அதனால் நான் சொல்வது போல எல்லாம் நடிக்க வேண்டும் என்று கூறி அவர்களின் அனுமதியோடு அந்த பெண்களை தனது வலையில் வீழ்த்தி உள்ளார்.
முதலில் அந்த பெண்களை கவர்ச்சியாக நிற்க வைத்து படம் எடுப்பதும், பிறகு அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோக்களையும் எடுத்துள்ளார். அப்போது நடிக்க கற்று கொடுப்பதுபோல சில பெண்களிடம் உல்லாசமாக இருந்து அதனையும் படம் எடுத்து மிரட்டி சீரழித்துள்ளார்.
சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், புதுச்சேரி பல்வேறு இடங்களில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்து உள்ளனர். புகார் கொடுத்த கனகாவை முதலில் வேலைக்கு சேர்த்து கொண்டு பிறகு ஆபாச படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசில் வேல் சத்ரியன் தற்போது சிக்கி உள்ளார். இதையடுத்து வேல் சத்ரியன், உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச படம் எடுத்தல், கணினி குற்றம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து போலீசாரிடம் சிக்கிய ஹார்டு டிஸ்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் இடம் பெற்றுள்ள இளம்பெண்களின் ஆபாச படங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இதில் தொடர்புடைய பெண்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுவரை ஒரு பெண் மட்டுமே புகார் கொடுத்துள்ள நிலையில் மற்றவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறையில் உள்ள வேல் சத்ரியனை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.