கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு சீல் வைப்பு

கும்பகோணத்தில் விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-10-17 20:49 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

பைபாஸ் சாலை

கும்பகோணம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் விவசாயி. இவருக்கு சொந்தமாக செட்டிண்டபம் பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 500 சதுர அடி இடத்தை கும்பகோணம் பைபாஸ் சாலை பணிகளுக்காக கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட இடத்துக்கான இழப்பீடு தொகை கிடைக்காததால் சாமிநாதன் தன்னிடமிருந்து கையகப் படுத்தப்பட்ட இடத்துக்கு உரிய இழப்பீடு தொகையை சந்தை மதிப்பீட்டின்படி வழங்க வேண்டும் என கும்பகோணம் முதன்மை சார்பு கோர்ட்டில் வருவாய் கோட்டாட்சியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு

இந்த வழக்கினை கடந்த 2016-ம் ஆண்டு விசாரித்த நீதிபதி, சாமிநாதனுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாவட்ட நிர்வாகம் இழப்பீடு தொகையை உரிய காலத்தில் வழங்காமல் கால தாமதம் செய்து வந்தது.இதைத்தொடர்ந்து சாமிநாதன் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.அப்போது நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதிக்குள் சாமிநாதனுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் தவறினால் கோட்டாட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

நிறைவேற்று மனு

இந்த உத்தரவை தொடர்ந்தும் சாமிநாதனுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் கடந்த 10-ந் தேதி கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்ற ஊழியர்கள், இழப்பீடு வழங்காத கோட்டாட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர்.ஆனால் இதன்பிறகும் மாவட்ட நிர்வாகம் இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனால் சாமிநாதன் மீ்ண்டும் கோர்ட்டில் இழப்பீடு தொகை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார்.இந்த நிறைவேற்று மனுமீது நீதிபதி நடவடிக்கை மேற்கொண்டு கோட்டாட்சியரின் அலுவலகத்தில் உள்ள தளவாடப் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

சீல் வைப்பு

இதன் பேரில் நேற்று காலை கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக பகுதிக்கு கோர்ட்டு ஊழியர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர். அப்போது அலுவலகத்தில் கோட்டாட்சியர் இல்லாததால் அலுவலக பணியாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்த நிலையில் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை வெளியேற்றிய கோர்ட்டு ஊழியர்கள் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தின் ஒரு அறையில் இருந்த கணினிகள், மேஜை, நாற்காலிகள் இருந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்