இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்430 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி வைப்புத்தொகைக்கான ஆணைகள்கலெக்டர் சரயு வழங்கினார்

Update: 2023-08-08 19:45 GMT

கிருஷ்ணகிரி

முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, 430 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வைப்புத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமுக நலத்துறை சார்பாக, முதல்-அமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, 430 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வைப்புத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து உயர்கல்வி படிக்கும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.

மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் 2-ம் செவ்வாய்க்கிழமை அன்று இத்திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் கடந்த மாதம் 11-ந் தேதி நடந்தது.

430 பயனாளிகள்

இந்த முகாமில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு வைப்புத் தொகை ரசீது மற்றும் முதிர்வுத் தொகை காசோலைகள் வழங்கப்பட்டு மனுக்களும் பெறப்பட்டது. அன்று பெறப்பட்ட மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் 430 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான வைப்புத்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 250 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தையின் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும்.

சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெற்று உயர்கல்வி படித்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகநல அலுவலக களப்பணியாளர்கள் மூலம் இந்த திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொண்டு புதிய பயனாளிகளை கண்டறியவும், இந்த திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெற்று வழங்கிடவும், இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வள அலுவலர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்