மின் இழுவை ரெயிலில் செல்ல முதியவருக்கு அனுமதி மறுப்பா?

பழனி முருகன் கோவிலில் மின் இழுவை ரெயிலில் செல்ல முதியவருக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் படிப்பாதையில் தவழ்ந்து வந்த வீடியோ வைரல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-30 19:30 GMT

கிருஷ்ணகிரி பக்தர்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதானமானதாக உள்ளது. மேலும் விரைவாக செல்லும் வகையில் ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் ரோப்கார் சேவை காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், மின் இழுவை ரெயில் சேவை சாதாரண நாட்களில் அதிகாலை 5.30 மணியில் இருந்தும், விசேஷ நாட்களில் அதிகாலை 3.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரையும் செயல்படுகிறது. இதில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரியை சேர்ந்த பக்தரான முருகேசன் (வயது 77) தனது குடும்பத்தினர் 5 பேருடன் பழனியில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்றனர். பின்னர் இரவு ராக்கால பூஜையில் சாமியை தரிசனம் செய்தனர்.

படியில் தவழ்ந்து...

பின்பு 9.30 மணிக்கு மின் இழுவை ரெயில் நிலையம் சென்று அடிவாரம் செல்ல டிக்கெட் கேட்டனர். ஆனால் மின் இழுவை சேவை நேரம் முடிந்து விட்டதால் அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் படிப்பாதை வழியாக கீழே இறங்கி கொண்டிருந்தனர். அப்போது வயது முதிர்வு காரணமாக முருகேசனுக்கு கால் வலி ஏற்பட்டதால், கைகளை ஊன்றி படியில் தவழ்ந்து இறங்கியதாக தெரிகிறது. தகவலறிந்த கோவில் காவலாளிகள் சிலர் அவரை நாற்காலியில் வைத்து தூக்கி அடிவாரம் கொண்டு வந்தனர்.

முதியவர்களுக்கு முன்னுரிமை

இதுபற்றி முருகேசன் குடும்பத்தினர் கூறும்போது, மலைக்கோவிலில் இருந்து அடிவாரம் செல்ல டிக்கெட் கேட்டபோது சர்வர் காரணமாக டிக்கெட் வழங்க முடியவில்லை என பணியாளர்கள் கூறினர். 2 முதியவர்களுக்கு மட்டுமாவது டிக்கெட் கேட்டும் தரவில்லை. எனவே படிப்பாதை வழியாக மெல்ல நடந்து வந்தோம். இதற்கிடையே விரைவாக செல்லுங்கள் மின்விளக்குகளை அணைக்க போகிறோம் என பணியாளர்கள் அறிவிப்பு செய்தனர். அதனால் விரைவாக நடந்து வந்தோம். அப்போது முருகேசனுக்கு கால்வலி ஏற்பட்டது. எனவே அவர் கைகளை ஊன்றி தவழ்ந்து வந்தார். அதையடுத்து காவலாளிகள் உதவியுடன் அவரை கீழே கொண்டு வந்தோம். பழனியை பொறுத்தவரை மலைமீது கோவில் உள்ளது. எனவே முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வருவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை பெயரோடு அல்லாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் பக்தர்களிடம் அலட்சியம் காட்ட கூடாது என்றனர்.

பழனி கோவிலில் தரிசனத்துக்கு வந்த முதியவர் படிப்பாதையில் கையால் தவழ்ந்து வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்