ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-11 21:05 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு அருகே உள்ள ஊர் கண்மாயில் மழைநீர் தேங்கியது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் ஈரப்பதமாக இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் போட்டி நடத்த அனுமதி மறுத்து விட்டது. மேலும் வருகிற 21-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அய்யாபட்டி கிராம மக்கள் நேற்று நத்தம் பஸ்நிலையம் ரவுண்டானா முன்பு திரண்டனர். ஜல்லிக்கட்டை நாளை (இன்று) நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது கிராம மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மறியல் நடைபெறும் இடத்துக்கு அதிகாரிகள் வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிப்பதாக கூறினர்.

இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நத்தம் - திண்டுக்கல் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்