நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தீட்சிதர்களுடன், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-18 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி பக்தர்கள் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சிவராத்திரி மற்றும் சனிப்பிரதோஷத்தையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால், நேற்று ஒருநாள் மட்டும் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வாக்குவாதம்

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் ஜெயசீலா என்ற பெண் உள்ளிட்ட சில பக்தர்கள், சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதைபார்த்த தீட்சிதர்கள் அவர்களை சித்சபையில் ஏறவிடாமல் வெளியேற்றினர். இதனால் தீட்சிதர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து தீட்சிதர்கள் மற்றும் பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

அப்போது போலீசார், அரசாணைப்படி பக்தர்களை சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். இதையேற்ற தீட்சிதர்கள், மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்களை சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்