டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி; மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை டவுனில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மேயர் பி.எம்.சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
நெல்லை டவுனில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மேயர் பி.எம்.சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 16-ம் தேதி டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று டெங்கு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகராட்சி சார்பில் நெல்லையப்பர் கோவில் முன்பு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மேயர் பி.எம். சரவணன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, துணை ஆணையாளர் தாணுமாமலை மூர்த்தி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் கவுன்சிலர்கள் நித்தியபாலையா, சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், டி.பி.சி. பணியாளர்கள் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். நெல்லையப்பர் கோவிலில் முன்பு தொடங்கி வாகையடி முனைப்பகுதியில் நிறைவடைந்தது. அதன் பின்னர் மேயர் உள்ளிட்ட அனைவரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பின்னர் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது.
கண்காட்சி
இதேபோல் பாளையங்கோட்டையில் பொது சுகாதார துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பேரணி லூர்துநாதன் சிலை முன்பு தொடங்கி பாளையங்கோட்டை எருமைகிடா மைதானம் அருகே உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் திரளான செவிலியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
தச்சநல்லூர் மண்டலம் சாலை தெருவில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் ரேவதிபிரபு, டாக்டர் ரஞ்சித், சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், முருகன் தூய்மை இந்திய திட்ட பரப்புரையாளர்கள் சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் டெங்கு களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலப்பாளையம் பகுதியில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், கிறிஸ்டி, காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், ராமசாமி, பைஜூ ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நெல்லை கொக்கிரகுளம் இளங்கோஅடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் தெருவில் வீடுகளுக்கு தெற்கு பக்கமாக கழிவுநீர் ஓடை உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் வீட்டின் உள்ளே தேங்கியுள்ளது. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். எனவே அந்த ஓடையை சீரமைக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
குடிநீர்
36-வது வார்டு கவுன்சிலர் சின்னதாய் கொடுத்த மனுவில், பாளையங்கோட்டையில் ஒரு பள்ளி வளாக ஓரத்தில் சாக்கடை தேங்கி நிற்கிறது. இதனால் நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. அண்ணாநகர் பகுதியில் 50 வீடுகளுக்கு 8 நாட்களாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. அங்கு 20 வீடுகளுக்கு குடிநீர் முறையாக கிடைப்பதில்லை. சமாதானபுரம் காந்திநகரிலும் குடிதண்ணீரில் சாக்கடை கலந்து வருகிறது. காமராஜர் காலனி திருச்செந்தூர் சாலையில் கழிவு நீரோடை கட்டுமானத்தில் ஒருபக்கம் மட்டுமே சுவர் எழுப்பி வருகின்றனர். இதனால் தண்ணீர் காலனிக்குள் வர வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளி பிரதான கட்டிடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்று கவுன்சிலர் உலகநாதன் மனு கொடுத்தார்.
சான்றிதழ்
தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு மேயர் பி.எம்.சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்கு தடுப்பு களப்பணியில் மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும் சிறப்பாக செயலாற்றிய சுமார் 50 டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு, துணைமேயர் கே.ஆர்.ராஜூ நற்சான்றுகள் வழங்கி பாராட்டினார்.