வீடு, வீடாக டெங்கு கொசு தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்

வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக டெங்கு கொசு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் மேயர் சுஜாதா அறிவுறுத்தினார்.

Update: 2023-09-19 18:47 GMT

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி இணை கமிஷனர் சசிகலா, பூச்சியியல் வல்லுனர் காமராஜ், மாநகர் நலஅலுவலர் (பொறுப்பு) முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 5 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீடு, வீடாக தடுப்பு பணிகள்

அனைவரும் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒருவர் 50 வீடுகளுக்கு சென்று வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று கொசுப்புகை அடிக்க வேண்டும். மேலும் குடிநீர் தொட்டியில் அபேட் கரைசல் ஊற்ற வேண்டும். வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் தேவையற்ற தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். தினமும் சென்று வந்த பகுதிகள் மற்றும் வீடுகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் அதற்கு டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகள், நான் உள்பட அனைவரும் காரணமாகி விடுவோம். எனவே டெங்கு தடுப்பு பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு மேயர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

அதைத்தொடர்ந்து மேயர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், டெங்கு கொசு ஒழிப்பு பணியார்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். கூட்டத்தில் 4-வது மண்டலக்குழு தலைவர் வெங்கடேசன், சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், லூர்துசாமி, பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்