300 பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
வேலூர் மாநகராட்சியில் 300 பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர்நல அலுவலர் முருகன் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சியில் 300 பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர்நல அலுவலர் முருகன் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல்
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியில் 300 பணியாளர்கள் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) முருகன் கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே டயர், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி, அதில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும். எனவே மாநகராட்சியில் உள்ள டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
7 பேருக்கு டெங்கு அறிகுறி
இதுதவிர வீடுகளில் உள்ள தண்ணீர்தொட்டிகள், குடங்களில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என்பதை கண்டறிந்து அதில் அபேட் கரைசல் மருந்தை தெளிப்பார்கள். புழுக்கள் கண்டறியப்பட்டால் தண்ணீரை அகற்றும் நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள். பிளீச்சிங் பவுடரும் போடப்படுகிறது. மேலும், கொசு மருந்து அடிக்கும் பணியும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 7பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். பின்னர் அவர்களுக்கு வேறு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் இருந்து அவர்கள் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.