டெங்கு காய்ச்சல் பாதிப்பை 45 மருத்துவக்குழு கண்காணிப்பு

நாமக்கல்லில் இளைஞர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே காய்ச்சல் பாதிப்பை கண்டறிய மாவட்டத்தில் 45 மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக துணை இயக்குனர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-09-15 18:45 GMT

டெங்கு காய்ச்சல்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பரவல் அதிகரிக்காமல் இருக்க சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை வீடு வீடாக சென்று மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் உள்ளாட்சி அமைப்பினருடன் சேர்ந்து சுகாதாரத் துறையினரும் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் கொசுவலைகளால் மூடப்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்குழுக்கள்

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் க.பூங்கொடி கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 18 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதில் 18 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அவர் தற்போது நலமுடன் உள்ளார். தொடர்ந்து டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் வட்டாரத்திற்கு 3 மருத்துவக் குழுக்கள் வீதம் மாவட்டத்தில் மொத்தம் 45 குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பை கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் 600-க்கும் மேற்பட்டோர் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீர் மற்றும் குப்பை கழிவுகளில் உள்ள கொசுப்புழுக்களை அழிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்