செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-29 08:34 GMT

மறைமலைநகர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மறைமலைநகர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே பா.ம.க. நகர செயலாளர்கள் அரிகிருஷ்ணன், தணிகாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு திடீரென மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தாம்பரம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அதிவீரபாண்டியன், கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் ஜெயராஜ் மற்றும் ஏராளமான போலீசார் பா.ம.க.வினரை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச்செயலாளர் சண்முகம், நகர தலைவர்கள் சுரேஷ்குமார், தெய்வசிகாமணி, கமலக்கண்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்

பா.ம.க. மாநில கொள்கை பரப்புச்செயலாளர் முணு. பல்லவரசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் சரவணன், நகரச்செயலாளர் சிவக்குமார், நகர தலைவர் சங்கர் முன்னிலையில் திரளான பா.ம.க.வினர் உத்தரமேரூர் பஜார் வீதியில் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பா.ம.க. நிர்வாகிகளிடம் பேசி அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பா.ம.க. மாநில அமைப்பு குழு தலைவர் ஏகாம்பரம், மாமல்லபுரம் நகர செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது என்.எல்.சி.க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சாலை மறியல் காரணமாக சுற்றுலா வந்த கார், வேன் போன்ற வாகனங்கள் புராதன சின்னங்களுக்கு செல்ல முடியாமல் 500 மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

பின்னர் சுற்றுலா வாகனங்கள் மாற்று வழியாக திருப்பி விடப்பட்டு கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு சென்றன. மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அச்சரப்பாக்கம்

செங்கப்பட்டு தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் குமரவேல், மதுராந்தகம் முன்னாள் நகர செயலாளர் சபரி ஆகியோர் தலைமையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் பகுதியில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதேபோல அச்சரப்பாக்கம் முன்னாள் பா.ம.க. நகர செயலாளர் முருகன், பா.ம.க. நிர்வாகி மூர்த்தி, துணைத்தலைவர் ஹரி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அச்சரப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, அச்சரப்பாக்கம் நகரச் செயலாளர் பக்கிரி சாமி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சதீஷ், தருமன், சந்தோஷ், ஆறுமுகம், அன்பு, வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை தொழுப்பேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை அச்சரப்பாக்கம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் பா.ம.க. சார்பில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பா.ம.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் பா.ம.க. நிர்வாகிகள் நடராஜன், நைனியப்பன், கணேசமூர்த்தி, ரவீந்திரன், தமிழரசு, ஜனார்த்தனம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் திருக்கழுக்குன்றம் பஸ்நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் பா.ம.க.வினரை கைது செய்தனர்.

பரனூர்

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பஸ் நிலையம் அருகே காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் பரனூர் முதல் மறைமலைநகர் வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவாகர், செயற்குழு உறுப்பினர் கங்காதரன், மாணவரணியை சேர்ந்த குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க.வினர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ம.க.மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார். குன்றத்தூர் தெற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் ஜெயகாந்தன், வடக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர், தேவேந்திரன், ஒன்றிய அமைப்பு செயலாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்