மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு, கிறிஸ்தவர் ஐக்கிய பேரவையினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயர்கள், எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-07-05 18:45 GMT

நாகர்கோவில்:

மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு, கிறிஸ்தவர் ஐக்கிய பேரவையினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயர்கள், எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை ஒருங்கிணைந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஓய்ந்து, மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் மற்றும் உரிய நிவாரணம் கிடைக்கவும் மத்திய - மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஞானதாசன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மீரான்மைதீன், கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை தலைவர் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தக்கலை மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன், குமரி சி.எஸ்.ஐ. பிஷப் ஏ.ஆர்.செல்லையா, குழித்துறை மறைமாவட்ட அருட்பணியாளர் ஏசுரெத்தினம், இரட்சனிய சேனை மேஜர் ஜெயசேகர், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், தி.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் நசரேத் பசலியான், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர் சிவபிரபு, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மாநிலச் செயலாளர் அல்காலித் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், கிறிஸ்தவ ஐக்கிய பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரித்து பார்க்கக்கூடாது

கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை தலைவரும், ஆயருமான வின்சென்ட் மார் பவுலோஸ் பேசுகையில், "மணிப்பூரில் 28 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். மணிப்பூரில் அரசியல் சாசனத்துக்கும், மக்களாட்சிக்கும் எதிராக கலவரம் நடக்கிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். இது வரலாற்றில் மிகப்பெரிய கறையாகும். நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். மத்திய- மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உதவிட வேண்டும். சட்டம்- ஒழுங்கை பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். தற்போதைய நிலை மாறி இயல்பு நிலை திரும்ப வேண்டும். அங்கு அமைதி திரும்ப வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை பிரித்து பார்க்கக் கூடாது" என்றார்.

இதில் கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி. பேசும்போது, "மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கு தினமும் அங்குள்ள மக்கள் பலியாகி வருகிறார்கள். இதை தடுக்க தவறிய அந்த மாநிலத்தின் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

திடீர் பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர். சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் திரண்டு நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சாலையில் நின்றதையடுத்து போலீசார் அவர்களை சாலையோரமாக நிற்குமாறு அறிவுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீர்மான மனு

போராட்டம் முடிந்ததும் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை ஆயர்கள் வின்சென்ட் மார் பவுலோஸ், நசரேன் சூசை, ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் அளித்தனர். அதில் மணிப்பூர் மாநிலத்தில் மதவாத, இனவாத வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், உறவுகளையும், உடைமைகளையும், உரிமைகளையும் இழந்து உயிருக்கு பயந்து அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளவர்களை பிரதமர் நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பான இயல்பு வாழ்வுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். கலவரத்தில் உயிரிழந்த ஏழை- எளிய மக்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை அரசு முன்வந்து கட்டித்தர வேண்டும், கலவரத்தில் காணாமல் போனவர்களை உடனடியாக கண்டுபிடித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இடம் பெற்றிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்