உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-27 12:47 GMT

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் நகர பா.ஜ.க. துணைத் தலைவர் கலிகண்ணன் கடந்த 24-ந் தேதி ஊத்தங்கரை அருகே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் பிரிவு தலைவர் பி.பிரேம்குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர்கள கவியரசு, ஈஸ்வர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் அன்பழகன், பொதுச் செயலாளர்கள் கண்ணன், தண்டாயுதபாணி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.

உண்மையான குற்றவாளிகளை...

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. பிரமுகர் கலி கண்ணனை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், கலிகண்ணனை சமூக வலைத்தளங்களில் மிரட்டிய நபர்கள் யார் என்று கண்டுபிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.

கவுன்சிலர் குருசேவ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின் ராஜேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் விவேகானந்தன், நகர பொதுச் செயலாளர் டி.வி.‌பார்த்திபன், நகர செயலாளர் மேகநாதன், மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் பி.திலீப்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் டி.குமார் நன்றி கூறினார்.

போலீசார் வழக்கு

கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. பிரமுகர் கலி கண்ணன் உடலை சுடுகாட்டில் எரிக்க முயன்ற போது, மாநிலச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்டத் தலைவர் வாசுதேவன் ஆகியோருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையொட்டி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பா.ஜ.க.வினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தால் கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆகையால் அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்