தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி 20-ந் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் - செல்லூர் ராஜூ பேட்டி
தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி 20-ந் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்
தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி 20-ந் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
காவல்துறை அனுமதி
அ.தி.மு.க. மாநில மாநாடு அடுத்த மாதம்(ஆகஸ்டு) 20-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதற்காக மதுரை விமான நிலையம் ரிங்ரோடு கருப்பசாமி கோவில் எதிரே உள்ள திடல் தேர்வு செய்யப்பட்டு அங்கு கால்ேகால் நடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி கோரி ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மீண்டும் காவல்துறை அனுமதி தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், "அ.தி.மு.க. மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேசினோம், மாநாடு நடைபெறும் இடத்தினை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக கூறினர். மேலும், விரைவில் அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
20-ந் ேததி ஆர்ப்பாட்டம்
இந்த மாநாட்டினால் எந்தவொரு போக்குவரத்து நெரிசலும் வராத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுமார் 25 ஆயிரம் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு மக்கள் மத்தியில் எழுச்சியாக பரவி இருக்கிறது. இதில், அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். வரலாற்றில், அடுத்த தலைமுறையும் இந்த மாநாட்டை பற்றி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் மதுரையில் 31-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதுபோல், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வருகிற 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதற்கான வழிகாட்டுதலும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பணிகளும் நடக்கிறது.
அமைச்சர் வீட்டில் சோதனை
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழி உள்ளது. அதுபோல், அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. தி.மு.க. அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்செனில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.