உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி சார்பில் அரியலூர் பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். அரியலூர் நகர தலைவர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். திருச்சி கூட்ட செயலாளர் குணா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.