பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பணிநிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ராமநாதபுரம்.
ராமநாதபுரம் மாவட்ட தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன், மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் தலைமையில் ஆசிரியர்கள் கலெக்டர் அலவலகம் வந்தனர். இவர்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன்பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் சமயத்தில் தி.மு.க. தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பகுதி நேர சிறப்பாசிரியர்களாகிய நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களின் நிலை கருதி தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 21-ந் தேதி சென்னையில் வாழ்வாதார தீர்வு கிடைக்கும் வரையில் அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்களுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.